இலங்கை மருந்துக் கொள்கையின் நிறுவனர்

1920 பெப்ரவரி 13 ஆம் திகதியன்று பிறந்த பேராசிரியர் சேனக பிபிலே ஒரு புகழ்பெற்ற மருந்தாளராக இருந்ததோடு, இலங்கைத் தாய் இதுவரை உருவாக்கிய மனிதகுலத்தின் மிகச்சிறந்த மருத்துவதுறைசார் பரோபகரியாகவும் போற்றப்படுகின்றார்.
கண்டி திருத்துவக் கல்லூரியில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியையும், கொழும்பில் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் நிலைக் கல்வியையும் பெற்ற சேனக பிபிலே, 1945 ஆம் ஆண்டில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான தங்கப் பதக்கங்களை வென்று, முதலாம் வகுப்பு கௌரவ பட்டத்தையும் பெற்று ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்சார் ஆளுமையாகவும் திகழ்ந்தார். 1947 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்ட பின்னர், மிகவும் பாராட்டத்தக்க அங்கீகாரம் பெற்ற பெறுமதிவாய்ந்தக ஆராய்ச்சிகளுக்கு சேனக பிபிலே பங்களிப்புச்செய்ததோடு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அவர் முதலாவது மருந்தகவியல் பேராசிரியராகத் தெரிவுசெய்யப்பட்டு, துறைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு, பேராசிரியர் சேனக பிபிலே 1967 முதல் 1977 வரையான காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதல் பீடாதிபதியாகவும் நியமிக்கப்பட்டு, இலங்கையில் முதல் மருத்துவக் கல்வி அலகை ஆரம்பித்ததன் ஊடாக இலங்கையில் மருத்துவக் கல்வியின் இன்றியமையாத முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
தரப்பெயர்கள் கொண்ட மருந்துப் பொருட்களின் விடயங்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவுக்கு தலைமைதாங்க 1970 ஆம் ஆண்டின் அரசாங்கம் டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க மற்றும் டாக்டர் பிபிலே ஆகியோரை நியமித்தது. இந்த பிபிலே - விக்கிரமசிங்க அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தினால் உரிமைபெற்று, தொழிற்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய மருந்து உற்பத்தி நிறுவனத்தை தாபிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது.
பிபிலே - விக்கிரமசிங்க அறிக்கைக்குப் பின்னர் அரசாங்கமானது, திட்டத்தின் முதல் கட்டமாக அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. இரண்டாவது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்குள் உற்பத்தி செய்வதாக இருந்தது. 1985 ஆம் ஆண்டில், சுகாதார அமைச்சு அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான அமைப்பாக்க நிலையமொன்றை தாபிப்பதற்கான பிரேரணையொன்றை தயாரித்ததோடு அது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையால் (JICA) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மருந்துப் பொருட்கள் வர்த்தகத்தை ஒழுங்குறுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றையும் அரச அமைப்பொன்றையும் தாபிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டமையால், இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் கைதொழில் அமைச்சரவை அமைச்சர் டி.பி. சுபசிங்க, பேராசிரியர் பிபிலேயை இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபக தலைவராக நியமித்தார்.
பேராசிரியர் சேனக பிபிலே 1977 செப்டம்பர் மாதம் 29 ஆம் அன்று கயானாவில் காலமானார். உலகளாவிய ரீதியில் மனிதகுலத்திற்கு பயனளிக்கும் அவரது வாழ்வையும் பணிகளையும் இன்றும் உலகம் போற்றுகிறது.